(மகனுக்கு) – ALI (RALI) வரலாறு கண்ட கடிதம்– PART 2

நீதிபதிகள்

அப்புறம் உம் கவனத்தை நீதிபதிகளின் பக்கம் திருப்ப வேண்டும். நீதிக்கும் நேர்மைக்கும் எடுத்துக் காட்டாக நிற்கும் அவர்கள் எப்படி இருக்க வேண்டும் தெரியுமா? இந்தப்பதவிக்கு நீர் யாரைத் தேர்ந்தெடுக்க வேண்டும்? அவர்கள் செயலாற்றும்போது கலங்காதவர்களாகவும் வாதப் பிரதிவாதத்தின் போது கோபப்படாதவர்களாகவும் இருக்க வேண்டும்; உண்மையை எடுத்துக் கூறித் தீர்ப்பு வழங்கும் போது துணிவுள்ளவர்களாகவும் சொந்த விருப்பு வெறுப்புக்கு இடந்தராதவர்களாகவும் இருக்க வேண்டும். எதிர்ப்பட்டிருக்கும் பிரச்சினையை அடிமுதல் நுனிவரை அலசி ஆராயும் மனப்பான்மையும் நேர்மையை நேர்மை என்று கூறும் மனப்பண்பும் அவர்கள் பெற்றிருக்க வேண்டும். அவர்கள் மற்றவர்களின் முகஸ்துதிக்கு மயங்கக் கூடாது; மதிமயக்கம் அவர்களை அணுகக் கூடாது.

இத்தகையவர்கள் உம் நாட்டில் ஏராளமாக இருப்பார்கள் என்று நான் சொல்லவில்லை. அவர்களை எங்கும் காண முடியுமென்றும் நான் கூறவில்லை. அவர்கள் மிகக் குறைவாகத்தான் இருப்பார்கள். சிரமத்தைப் பொருட்படுத்தாமல் நீர் தேடியலைந்து அவர்களைக் கண்டுபிடிக்க வேண்டும்.

அவர்கள் நாட்டின் அமைதியையும் நீதியின் மானத்தையும் காப்பாற்றுகிறவர்கள். அவர்கள் உம்மிடம் உயர்ந்த பதவியில் இருக்க வேண்டும். மற்றவர்களால் எதிர்பார்க்க முடியாத படி மேலான அந்தஸ்தை அவர்களுக்கு நீர் கொடுக்க வேண்டும். அப்போதுதான் நீதியை நசுக்க நினைக்கும் அதிகாரிகள் பயப்படுவார்கள். பதவிக்கும் அந்தஸ்துக்கும் தகுந்தவாறு அவர்களின் வருமானத்தை உயர்த்தி வையும். மற்றவர்களின் கையை எதிர்பார்க்கும் நிலையில் அவர்களை வைத்து விடாதீர். அப்போதுதான் அவர்களால் லஞ்சப் பிணியிலிருந்து தம்மைக் காத்துக் கொள்ள முடியும்.

இது சம்பந்தமாக நீர் ஆழ்ந்து சிந்தனை செய்ய வேண்டும். ஏனெனில் நீர் பின்பற்றும் வழி முறைகள் ஒரு காலத்தில் அநியாயக்காரர்களால் மூடி மறைத்து வைக்கப்பட்டிருந்தன.

அவர்கள் யாரையும் பின்பற்றவில்லை. தம் உணர்வுகளுக்குத் தக்கவாறு நடந்தார்கள்; செய்ய வேண்டியதை மறந்தார்கள்; செய்யக் கூடாததைச் செய்தார்கள். அந்த அவல நிலை மீண்டும் உம் நாட்டுக்கு வரக்கூடாது.

தொடரும்…