(மகனுக்கு) – ALI (RALI) வரலாறு கண்ட கடிதம்– PART 2


போர்வீரர்கள்
உமது ராணுவத்தில் சுத்தமான உள்ளம் பெற்றவர்கள் சிலர் இருப்பார்கள்; இறைவனையும் பெருமானாரையும் நெஞ்சில் வைத்துக் காப்பாற்றுவார்கள்; உம் கருத்துக்களைக் குறைவின்றிச் செயல்படுத்துவார்கள்; சினத்தையடக்கியாள்வார்கள். வலி யோரை முரண் வழியிலிருந்து திருப்பும் அவர்கள் எளியோருக்கு ஆதரவு கொடுப்பார்கள். பலவீனமும் கோழைத்தனமும் இல்லாத அவர்கள் செயல் வீரர்கள். எனவே அவர்களை ராணுவத்துக்கு அதிகாரிகளாக நியமித்து வையும்.
ஏற்கனவே அரும் பணி புரிந்தவர்களையும் வீரமும் தயாளமும் உள்ளவர்களையும் நீர் அலட்சியம் செய்துவிடக் கூடாது. அவர்களுடன் நீர் நெருங்கிய தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டும். அவர்கள் பெருமைக்கும் கண்ணியத்திற்கும் உரியவர்கள்; மன்னிக்கும் மனப்பான்மை பெற்றவர்கள். பெற்றோர்கள் தமது குமாரர்களிடம் எப்படி நடந்து கொள்கிறார்களோ அப்படி நீர் அவர்களிடம் நடந்து கொள்ள வேண்டும். எந்தச் சூழ்நிலையிலும் அவர்களுக்குச் செலுத்தும் அன்பைக் குறைக்காதீர். சின்னஞ் சிறிய விஷயத்திலும் நீர் அன்பு காட்ட வேண்டும். இத்தகைய அன்பு சில வேளைகளில் மிகப் பெரும் பயனை உருவாக்கிவிடும்.
ராணுவ வீரர்களுக்கு உதவி செய்கிறவர்களே ராணுவத் தளபதிகளில் உயர்ந்தவர்களாக இருக்க வேண்டும். பகைவர்களை முறியடிக்கும் வழியில் வீரர்களின் சக்திகளையெல்லாம் ஒன்று திரட்டுவதற்குத் தம்மால் இயன்றதைச் செய்கிறவர்களே அந்தப் பதவிக்குத் தகுந்தவர்கள்.
நீர் அவர்களுக்கு எப்போதும் அன்பு காட்ட வேண்டும். இந்த அன்பு அவர்களின் உள்ளங்களை உமக்குச் சாதகமாகக் கனிய வைக்கும். நாட்டை ஆளும் அதிபதியின் செயல்களில் முக்கியத்துவம் வாய்ந்தது என்ன தெரியுமா? நாட்டில் அமைதியை நிலைநாட்டுவது; நேர்மையை அடிப்படையாகக் கொண்டு ஆட்சி புரிவது; ஆட்சிக்குட்பட்டிருக்கும் மக்களுக்குச் சலுகையும் அன்பும் காட்டுவது. இவைதாம் அரசர்களின் சிறப்புக்குத் துணை செய்கின்றன. எனவே அவர்களிடமுள்ள சிறு சிறு குறைகளை மறந்து விடும். அவர்களின் வீரத்தையும் செயல் திறனையும் உயர்த்தி வைத்துப் பாராட்டும்.
இந்தப் பாராட்டுரையால் வீரர்களின் உள்ளங்களில் துள்ளி யெழும் எண்ணங்கள் வர்ணனைக்கு அப்பாற்பட்டவை. தூங்கி வழியும் வீரனைக் கூட பாராட்டுரையால் தட்டி எழுப்பி விடலாம். ஒவ்வொரு வீரனுக்கும் வேலையை நிர்ணயித்துக் கொடும். ஒருவனின் வேலையை மற்றொருவனின் தலையில் போடாதீர். அவர்களின் சாதனைக்கு முக்கியத்துவம் கொடும்.
போர் வீரர்களுக்கிடையில் நீர் என்றைக்கும் பாகுபாடு காட்டக்கூடாது. அவர்கள் அனைவரும் நாட்டைக் காக்கும் புனிதப் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள். அவர்கள் அனை வரும் சரிசமமானவர்கள். அவர்களில் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்னும் வேற்றுமை கிடையாது. அவர்களுக்கு ஏற்படும் துன்பங்களையும் தேவைகளையும் நீர் முறைப்படி உணர்ந்து கொள்ள வேண்டும். பெரிய உத்தியோகஸ்தர்களுக்கு ஏற்படும் சிறிய துன்பத்தைப் பெரிதாகக் கருதாதீர். சிறிய உத்தியோகஸ்தர்களுக்கு ஏற்படும் பெரிய துன்பத்தைச் சிறியது என்று அலட்சியம் செய்யாதீர்.
சிக்கலும் சிரமமும் நிறைந்த பிரச்சினைகள் உமக்கு முன்னால் குவிந்து கிடக்கின்றனவா? எப்படி செயல்படுவது என்று தெரியாமல் நீர் குழம்புகிறீரா? அப்படியானால் அந்தப் பிரச்சினைகளையெல்லாம் இறைவனிடமும் பெருமானாரிடமும் ஒப்படைத்து விடும். இறைவனிடம் ஒப்படைப்பது என்றால், திருக்குர்ஆனை வைத்துத் தீர்ப்புப் பெறுவது என்று அர்த்தம். பெருமானாரிடம் ஒப்படைப்பது என்றால் அவர்களின் நடைமுறையைப் பின்பற்றுவது என்று பொருள்.
“நம்பிக்கையாளர்களே! இறைவனுக்கும் திருத்தூதருக்கும் உங்களில் அதிகாரிகளுக்கும் வழிப்பட்டு நடந்து கொள்ளுங்கள்” என்று திருக்குர்ஆன் கூறுகிறது.