(மகனுக்கு) – ALI (RALI) வரலாறு கண்ட கடிதம்– PART 2


மக்களின்ஆதரவு
குடி மக்களின் அன்பும் ஆதரவும் உமக்குக் கிடைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறீரா? அதற்குரிய ஒரே வழி இதுதான்: அவர்களுக்கு உதவி செய்யும். அவர்களுக்கு ஏற்படும் துன்பங்களைத் துடைத்து ஆதரவுடன் நடந்து கொள்ளும். அவர்களிடமுள்ள சிறு குறைகளையெல்லாம் பெரிது படுத்தாதீர். அவர்கள் செய்யத் தவறிய சிறிய நன்மைகளையெல்லாம் அன்பு மனத்துடன் மன்னித்துவிடும். உம் வெறுப்பை அவர் கள்மீது என்றைக்கும் கொட்டாதீர். இது மக்களின் ஆதரவை உம் பக்கம் இழுத்து வரும் ஆற்றல் படைத்த ஒன்று. அவர்களின் ஆதரவு கிடைத்துவிட்டால் அப்புறம் நீர் எந்தத் துன்பத்துக்கும் அஞ்சவேண்டியதில்லை. இதன் துணைகொண்டு எதிர் படும் இன்னல்களையெல்லாம் தகர்த்தெறிந்து விடலாம். உமக்கு வரும் துன்பங்களை மக்கள் தமக்கு வரும் துன்பங்கள் என்று கருதுவார்கள். ஆட்சித் துறையில் இதைவிடப் பெரிய சக்தி ஒன்று இருக்கிறதா என்ன?
உமது பிரஜைகளில் நற்காரியங்கள் செய்கிறவர்கள் எத்தனையோ பேர். அவர்களது செயல்களில் அன்பும் சீர்திருத்தமும் கலந்து நிற்கின்றன. அவர்களுக்கு ஆக்கம் கொடுக்க வேண்டியது உமது பொறுப்பு. அவர்களின் செயல் வேகத்தைக் குறைத்து விடாதீர். நற்காரியங்களுக்கு வித்திட்டவர்கள் என் றைக்கும் பெருமையடையலாம். நற்காரியங்களை நசித்தொழித்தவர்கள் என்றைக்கும் அந்தக் கெட்ட பெயருக்கு இலக்காகியே தீர வேண்டும்.
மார்க்க அறிஞர்களையும் தத்துவஞானிகளையும் ஒன்று திரட்டி வைத்து, கருத்தரங்கு நடத்தும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளும். இத்தகைய கருத்தரங்குகள் உமது ஆட்சியில் அடிக்கடி நடக்க வேண்டும். நாட்டில் அமைதியை நிலைப் படுத்துவதற்கும் நெருக்கடியைச் சமாளிப்பதற்கும் இது சிறந்த வழி. அரசியல் நடவடிக்கைகளில் மக்களின் திருப்திக்குரியது எது, வெறுப்பிற்குரியது எது என்று கண்டுபிடிப்பதற்கும் இந்தக் கருத்தரங்குகள் துணை செய்யக்கூடும்.
உமது ஆட்சியின் கீழே இருப்பவர்கள் பல தரப்பட்டவர்கள். சிலர் ராணுவத்தில் பணிபுரிகிறார்கள். அவர்களின் பணி மகத்தானது. இன்னும் சிலர் நீதிக்குப் பிரதிநிதியாக நீதி மன்றங்களில் பணியாற்றுகிறார்கள். வேறு சிலர் மக்களிடமிருந்து வரிவசூல் செய்கிறார்கள். மற்றும் சிலர் மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக வியாபாரம் செய்கிறார்கள். இவர்கள் அனைவருக்கும் அடுத்தபடியாகச் சிலர் வறுமை யிலும் துன்பத்திலும் வாடுகிறார்கள். இவர்கள் ஒவ்வொரு வருக்கும் இறைவன் ஒவ்வொரு வழியை ஏற்படுத்திக் கொடுத் திருக்கிறான். அவர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்னும் சட்டங்கள் திருக்குர்ஆனில் விளக்கப்பட்டிருக்கின்றன. அவற்றை நாம் எப்போதும் பேணிக் காக்க வேண்டும்.
ராணுவத்தின் முக்கியத்துவம் மறுக்க முடியாத ஒன்று. மக்களின் வாழ்வுக்கும் அமைதிக்கும் அது அரண் போன்றது. ஆட்சிக்கு அது பெருமை தருகிறது; மார்க்கத்துக்குக் கண்ணியம் கொடுக்கிறது. நாட்டில் ராணுவம் இல்லையேல் நாட்டு மக்களிடம் அமைதியைப் பார்க்க முடியாது. அவர்கள் திகிலுடன் வாழ வேண்டி ஏற்படும். ராணுவத்தை வலுப்படுத் துவதற்கு மக்கள் கொடுக்கும் வரிப்பணத்தில் ஒரு பகுதி செலவிடப்படுகிறது. எதிரிகளை முறியடிப்பதற்கும் ராணுவ வீரர்களுக்குத் தேவையான ஆயுதங்களைப் பெறுவதற்கும் அந்தப் பணம் பெரிதும் பயன்படும்.
நீதிபதிகள், சட்ட நிபுணர்கள், உயர்தர அதிகாரிகள் முதலியோரின் உழைப்பும் நாட்டு நலனில் போதிய அளவு பங்கு பெறுகிறது. மக்களுக்கு மத்தியில் வியாபாரத்திலோ இதர காரியங்களிலோ அநீதி புகுந்துவிடாதபடி தடுக்கும் பொறுப்பை நீதிபதிகள் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். மக்களுக்குத் தேவையான சட்டங்களை வகுப்பதற்குச் சட்ட நிபுணர் கள் இருக்கிறார்கள், மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு அதிகாரிகள் உழைக்கிறார்கள்.
நாட்டிலுள்ள வியாபாரிகள் ஒன்றும் குறைந்து விட வில்லை. அவர்களும் நாட்டு மக்களுக்குத் தம்மால் இயன்ற உதவிகளைச் செய்கிறார்கள். மக்களுக்குத் தேவையானவற்றை யெல்லாம் கடை வீதியில் குவித்து வைத்து விற்பனை செய்கிறார்கள். இதனால் நாட்டு மக்கள் தமது தேவைகளை எளிதாக நிறைவேற்றிக் கொள்கிறார்கள்.
அடுத்து நம் சிந்தனைக்கு வறியவர்கள் வருகிறார்கள். அவர்கள் வறுமையின் கோரப் பிடியில் அகப்பட்டுக்கொண்டு நெளிகிறார்கள். இத்தகையவர்களுக்கு எப்போதும் நீர் உதவி செய்ய வேண்டும்; அவர்களின் தேவைகளை முடித்துக் கொடுக்க வேண்டும்; அவர்களை அன்புடன் சேர்த்துக்கொள்ள வேண்டும்.