(மகனுக்கு) – ALI (RALI) வரலாறு கண்ட கடிதம்– PART 1

மறக்க முடியாத பொறுப்பு

நீர் ஏற்றிருப்பது பெரியதொரு பொறுப்புத்தான். பெரிய தொரு நாட்டுக்கு இப்போது நீர் அதிகாரி. இப்படி எண்ணிப் பார்க்கும்போது உம் உள்ளத்தில் கர்வம் துளிர்விடுகிறதா? அப்படியானால் உமக்கும் மேலே, உம்முடைய முழு ஆற்றலுக்கும் மேலே ஓங்கி நிற்கும் இறையாட்சியை எண்ணிப் பாரும். உமக்கு அசாத்தியமானவை அனைத்தும் அவனுக்குச் சாதாரண காரியங்கள். எனவே இறைவனின் வலிமையையும் ஆட்சியையும் நீர் மறந்துவிடக் கூடாது; எச்சரிக்கிறேன். அவன் நினைத்தால் அநியாயக்காரர்கள் இருந்த இடம் தெரியாமல் அழிந்து போவார்கள்; கர்வம் பிடித்தவர்கள் கணணுக்குத் தெரியாமல் மறைந்து போவார்கள்.

இறைவனின் கட்டளைகளை மதித்து நடந்து கொள்ளும். உம்மைப் பொறுத்த மட்டில் நல்லவராக இருக்க முயற்சி செய்யும். உம் குடும்பத்தாரையும் குடிமக்களையும் நேர்மையால் ஒன்று சேர்த்து வையும். இல்லையேல் நீர் தெரிந்தோ தெரியாமலோ அநீதி இழைக்கக் கூடும். இறைவனின் அடியார் களுக்கு அநீதி இழைப்பது பெருங்குற்றம். இறைவனைப் பகைத்துக் கொள்கிறவர்கள் யாராயிருந்தாலும், அவர்கள் இறைவனின் அன்பை இழந்து விடுவார்கள்; அவனுடைய வெறுப்புக்கு இலக்காவார்கள்.

அநீதி செய்கிறவர்கள் இதை நன்கு கவனிக்க வேண்டும். இறைவனின் கருணையை அழிக்கும் செயல் ஒன்று உண்டென் றால் அது அநீதிதான். பாதிக்கப்பட்ட மக்களின் ஈனப் புலம்பலை இறைவன் கேட்டுக் கொண்டிருக்கிறான்; அநியாயக் காரர்களைத் தண்டிக்கத் தயாராக இருக்கிறான்.

நீர் எப்போதும் நடுநிலையில் நின்று செயலாற்ற வேண்டும். உமது செயல்முறைகள் அனைத்திலும் இந்த நடுநிலைக் கொள்கை கடைபிடிக்கப்பட வேண்டும். மக்களின் திருப்தி யையும் நேர்மையையும் வைத்து ஆட்சி நடத்தும். உமது தீர்மானத்தை ஒரு சிலர் ஆதரிக்கும்போது பலர் எதிர்க்கிறார்களா? அப்படியானால் அந்தத் தீர்மானத்தைக் கைவிட்டு விடும். நீர் செய்யத் தீர்மானித்திருக்கும் காரியத்திற்குப் பெரும்பாலோர் ஆதரவு தருகிறார்களா? தீர்மானத்தைத் துணிவுடன் செய்து முடியும். உமது தீர்மானத்தை எதிர்க்கும் சிறுபான்மை யோர் பெருந்தன்மையோடு தமது கருத்தை மாற்றிக் கொள்வார்கள்; உம்மை மன்னித்து விடுவார்கள்.

மக்களை மதிப்பது மன்னனுக்கழகு

சிலவேளை மக்களிடம் நீர் குறை காணக்கூடும். சுயநலத்தையே அடிப்படையாகக் கொண்டு பேராசையோடு செயலாற்றுகிறவர்கள் என்றைக்கும் உம்மைவிட்டு விலகியிருக்கட்டும். அவர்களுக்கு நீர் முழு அன்பைக் கொடுக்க வேண்டியதில்லை. என்றாலும் அவர்களின் குற்றங்களையும் சுயநலப் போக்கையும் பறையடிக்காதீர். மக்களின் குற்றங்குறைகளை மறைத்து வைப்பது மன்னனின் பொறுப்பு. மக்களின் மானத்துக்கு நீர் மதிப்புக் கொடுக்க வேண்டும். உமது மானத்துக்கு இறைவன் மதிப்புக் கொடுப்பான்.

மக்கள் செய்யும் தவறுகளைப் பெரிதாக்கிக் கூறுகிறவர்கள் பலர் இருப்பார்கள். அவர்களின் கூற்றுக்களை அப்படியே ஏற்றுக் கொள்ளாதீர். சீர்திருத்தவாதிகளைப் போல்பேசும் அவர்கள் நேர்மைக்குத் திரை போடுகிறவர்கள். மக்களிடம் நீர் சிறந்த முறையில் நடந்து கொள்ள வேண்டும். இதனால் அவர்களின் உள்ளங்களிலிருந்து பொறாமையுணர்வைக் கிள்ளி எறிந்து விடலாம். எந்த நிலையிலும் அவர்களுக்குத் தீங்கு செய்யாதீர். அவர்களின் மனப்பரப்பில் பகைமையைத் தோன்ற விடாமல் தடுப்பதற்குச் சிறந்த வழி இது.

தொடரும்…