(மகனுக்கு) – ALI (RALI) வரலாறு கண்ட கடிதம்– PART 1

மக்களும் மன்னனும்

எனவே நீர் எப்போதும் செயல் வீரராக இருக்க வேண்டும். நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் தேவையான நல்ல காரியங்களைத் தொடர்ந்து செய்யும். இதில் நீர் முழுக் கவனம் செலுத்த வேண்டும். என்றைக்கும் மனம்போனபடி நடக்காதீர். தீயவற்றுக்கும் உமக்குமிடையில் எப்போதும் கனத்த திரை யொன்று நிற்க வேண்டும்.

மக்கள் மீது நீர் முழு அன்பு செலுத்த வேண்டும். கொடிய வனவிலங்குகளைப்போல், மக்களின் உணவையும் உடையையும் பறித்துக் கொள்ளாதீர். மக்களில் ஒரு சாரார் உம்மோடு இணைந்து நின்று இறைபணி புரிகிறவர்கள். மற்றொரு சாரார் உம்மோடு தொடர்பு கொள்ளாமல் தனித்து நின்று வாழும் குடிமக்கள். முதல் சாராரைப் பற்றி ஒன்றும் சொல்ல வேண்டியதில்லை. ஏனெனில் அவர்கள் இறைபணியில் ஈடுபட்டிருக் கிறார்கள். அவர்கள் தவறு செய்யக் கூடும் என்பதை நான் மறுக்கவில்லை என்றாலும், அவர்களைவிட இரண்டாம் சாரார் அதிகமாகத் தவறு செய்யக்கூடும்.

குற்றவாளிகள் என்ற முறையில் அவர்கள் உமக்கு முன்னால் நிறுத்தப்படும்போது அவர்களுக்கு நீர் அன்பையும் மன்னிப்பையும் அளிக்க வேண்டும். காரணம் அவர்களுக்கு நீர் அதிகாரி. இப்படி நீர் நேர்மையுடன் நடந்து கொண்டால் இறைவன் உம் குற்றங்களை மன்னிப்பான். காரணம், உமக்கும் உம்மை அதிகாரத்தில் அமர்த்திய எனக்கும் அவன் அதிகாரி.

உமக்குக் கிடைத்திருக்கும் பதவி உம் மனத்தில் கர்வத்தைத் தோற்றுவிக்காதபடி பார்த்துக் கொள்ளும். இது ஒரு சோதனை என்பதை நீர் நன்குணர்ந்து கொள்ள வேண்டும். மக்களின் பொறுப்பை உம்மிடம் ஒப்படைத்த இறைவன் உம்முடைய எண்ணங்களையும் செயல்களையும் ஊன்றிக் கவனித்துக் கொண்டிக்கிறான். இறைவனின் சட்டங்களுக்கு மதிப்புக்கொடும்; அவனைப் பகைத்துக் கொள்ளாதீர். அவன் உம்மைத் தண்டிக்கும் போது யாராலும் உமக்கு உதவி செய்ய முடியாது. அவனது வெறுப்பை உம்மால் தாங்க முடியாது. அவனுடைய அன்பையும் மன்னிப்பையும் உம்மால் அலட்சியம் செய்து விட முடியாது.

எனவே மன்னிக்கும் விஷயத்தில் கஞ்சத்தனம் காட்டாதீர். அன்பிலிருந்து உருவாகிறது மன்னிப்பு. அன்புக்கு உலகத் தையே அடக்கியாளும் பேராற்றல் உண்டு.

“நான் இந்நாட்டுக்கு அதிகாரி. பொறுப்புள்ள இந்த வேலைக்கு நான் நியமிக்கப்பட்டிருக்கிறேன். குற்றவாளிகளை நான் தண்டித்துத்தான் ஆக வேண்டும். என் வேலையில் நான் குறை வைக்கக் கூடாது” என்று சொல்லிக் கொண்டு சிறிய குற்றங்களுக்கெல்லாம் கொடிய தண்டனை கொடுத்து விடாதீர். நெஞ்சில் நிழலாடும் பெருமையுணர்வே உம்மை இப்படிப் பேச வைக்கிறது. தண்டனை கொடுக்கும் விஷயத்தில் நீர் ஆர்வம் காட்டக் கூடாது.