(மகனுக்கு) – ALI (RALI) வரலாறு கண்ட கடிதம்– PART 2

ஆலோசனைக்குழு

உலோபிகள், கோழைகள், பேராசைக்காரர்கள் முதலிய யாருடனும் ஆலோசனை நடத்தாதீர். உலோபிகள் வறுமையையும் பொருளாதார நெருக்கடியையும் காட்டி நேர்மையை ஒத்திப்போடச் சொல்வார்கள். கோழைகளின் நிலை இன்னும் மோசமானது. உமது துணிவை அவர்கள் துண்டித்து விடுவார்கள். பேராசைக்காரர்களைப் பற்றிச் சொல்வதற்கு என்ன இருக்கிறது? பணத்தில் மட்டுமின்றி, இன்பத்திலும் அவர்கள் பேராசை வைத்திருக்கிறார்கள். நீதி, அநீதி என்று பார்க்காமல் – நல்வழி, முரண்வழி என்று கவனிக்காமல், கிடைக்கும் இன்பங்களையெல்லாம் அனுபவித்துவிட வேண்டும் என்ற அவர்களின் கொள்கையை நீர் என்றைக்கும் ஆதரிக்கக் கூடாது. அவர்களிடம் நீர் ஆலோசனை நடத்தினால் இந்த ஆபத்து ஏற்பட முடியும். தம் கொள்கையை அவர்கள் உமது நெஞ்சத்தில் பதிய வைக்க முயற்சி செய்வார்கள்.

இறைவன் மீது அவநம்பிக்கை ஏற்படும்போதுதான் உலோபத்தனம், கோழைத்தனம், பேராசைக் குணம் ஆகிய மூன்றும் உருவாகின்றன.

உம்முடைய ஆலோசனைகளுக்கென்று அமைச்சர்கள் இருக்கிறார்கள். அவர்கள் எல்லோரும் நல்லவர்கள் அல்லர். நீர் பதவிக்கு வருவதற்கு முன்பிருந்தே சிலர் அதிகாரத்தில் அமர்ந்திருக்கிறார்கள். மறைந்து போன அந்த ஆட்சியில் அவர்கள் எப்படி நடந்திருக்கிறார்கள் தெரியுமா? கொடியவர் களுக்கும் அயோக்கியர்களுக்கும் அவர்கள் நண்பர்களாக இருந்தார்கள்; எந்தக் குற்றத்தை எப்படிச் செய்யலாம், எந்தச் சூழ்ச்சியை எப்படிச் செயல்படுத்தலாம் என்று சொல்லிக் கொடுக்கும் ஆலேரசனையாளர்களாக இருந்தார்கள். நாட்டில் எந்த மூலையில் தவறு நடந்தாலும் அதில் அவர்கள் பெரும் பங்கு பெற்றார்கள்.

அவர்கள் இன்றைக்கும் உமது ஆலோசனைக் குழுவில் இருக்கத்தான் செய்கிறார்கள்; எச்சரிக்கிறேன். அவர்களுக்கும் உமக்குமிடையில் எவ்வித ரகசியத் தொடர்பும் இருக்கக் கூடாது. ஏனெனில் அவர்கள் தீயவர்களின் துணைவர்கள்; அநியாயக்காரர்களின் சகோதரர்கள். அவர்கள் நடந்தது போல் நீர் நடக்கக் கூடாது; அவர்களின் கருத்தை ஆதரிக்கக் கூடாது. அவர்கள் உம்மை முழு மனதுடன் ஆதரிக்கவில்லை. உம்மீது அவர்களுக்கு அன்புமில்லை; அக்கரையுமில்லை. அவர்களிட மிருந்து நீர் எந்த ஒத்தாசையையும் எதிர்பார்க்க முடியாது.

அப்படியானால் உமது அமைச்சர்களில் யாரிடம்தான் நீர் யோசனை கேட்கவேண்டும்? யாரைத்தான் முழு மனத்துடன் நம்ப வேண்டும்?

சொல்கிறேன். கசப்பான உண்மையைத் துணிந்து கூறுகிறவர்கள் யாரேனும் இருக்கிறார்களா? இறைவனின் கட்டளைக்கு எதிராக நீர் நடக்க முற்படும்போது உமக்கோ உமது அதிகாரத்துக்கோ அஞ்சாமல் நேர்மைக்கு வாதாடும் அமைச்சர்கள் யாரேனும் இருக்கிறார்களா? அவர்களைத் தேர்ந்தெடுத்து வைத்துக் கொள்ளும். அவர்கள் சிறந்தவர்கள்; கலந்து ஆலோசிப்பதற்குத் தரமானவர்கள்.

ஒழுக்கமுள்ளவர்களிடம் நெருங்கிய தொடர்பு வைத்துக் கொள்ளும். அவர்கள் உம்மைச் சிறந்த ஒழுக்கசீலர் எனப் பாராட்ட வேண்டுமென்று எதிர்பார்க்காதீர். உம்மிடமுள்ள குறைகளை அவர்கள் எடுத்துச் சொல்லட்டும்; பரவாயில்லை. ஆனால் நீர் செய்திராத நன்மைகளையெல்லாம் செய்து வருவதாக அவர்கள் கூறினால் உடனே மறுத்துப் பேசும். பாராட்டும் கண்ணியமும் செயல்களாலேயே உருவாகின்றன. செய்யாத செயலுக்குப் பாராட்டையும் கண்ணியத்தையும் எதிர்பார்ப்பது அறியாமை. இருக்கும் கண்ணியத்துக்கே அது ஆபத்தை உண்டாக்கிவிடும்.

நல்லவர்கள் நல்லவர்களாக இருக்கட்டும்; கெட்டவர்கள் கெட்டவர்களாக இருக்கட்டும். இவ்விருவருக்குமிடையில் விழுந்திருப்பது கனமானதொரு திரை. அதைக் கிழித்தெறிந்து விடாதீர். நல்லவர்களையும் கெட்டவர்களையும் ஒரே நிலையில் வைத்துப் பழகாதீர். இதனால் நல்லவர்கள் வேதனைப்படுவார்கள்; கெட்டவர்கள் தம் போக்கில் நம்பிக்கை கொள்வாரகள். எனவே நல்லவர்களுக்குக் கண்ணியம் கொடும்; கெட்டவர்களுக்குத் தண்டனை கொடும்.