(மகனுக்கு) – ALI (RALI) வரலாறு கண்ட கடிதம்– PART 1

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்

மாலிக்பின் ஹாரிசுக்கு முஸ்லிம்களின் தலைவரான அலீ இப்னு அபீதாலிப் எழுதியது.

உம்மை எகிப்துக்கு அதிகாரியாக்கி அனுப்பியபோது நான் கூறிய வார்த்தைகளை இப்போது உம் நினைவுக்குக் கொண்டுவர விரும்புகிறேன். நாட்டில் ஆட்சி செய்ய வேண்டிய பொறுப்பையும் எதிரிகளுடன் போராட வேண்டிய பொறுப்பையும் உம்மிடம் நான் ஒப்படைத்தேன். நகரங்களை நிர்மாணிக்க வேண்டிய பொறுப்பும் மக்களுக்கு மத்தியில் சீர்திருத்தம் செய்ய வேண்டிய பொறுப்பும் உம்மிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன. இறையச்சத்துக்கும் இறை வழி பாட்டுக்கும் நீர் பெரிதும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று நான் கூறினேன். ஏனெனில் அவற்றின் துணையின்றி யாராலும் முழு வெற்றியை அடைய முடியாது. மார்க்கத்துக்கு முரணான எண்ணங்கள் தோன்றும்போது அவற்றை உம் மனத்தை விட்டு வெளியேற்றிவிடும் என்றும் கூறினேன். ஏனென்றால் ஒரு சிலரைத் தவிர்த்து, மற்ற எல்லோரும் உணர்வுகளுக்கே முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறவர்களால் நிரந்தரமாக நேர்மையைக் கடைபிடிக்க முடியாது.

நீர் கொடுத்தவாக்கு

மாலிக்! உம்மை ஒரு நாட்டுக்கு அதிபராக்கி அனுப்பி வைத்திருக்கிறேன். உமக்கு முன்னால் அங்கு ஓர் ஆட்சி நடந்து

கொண்டிருந்தது. அந்த ஆட்சியாளர்கள் எப்படி நடந்தார்கள் என்று உமக்குத் தெரியும். அப்போது நல்லதும் நடந்தது. கெட்டதும் நடந்தது. அவர்களின் ஆட்சி முறையைப் பற்றி நீர் எவ்வளவோ சொன்னீர். அவர்களை எப்படி யெல்லாம் திருத்தலாம் என்று விரிவுரை கொடுத்தீர். ஆனால் இப்போது அவர்கள் அங்கு இல்லை. அவர்களின் ஆட்சி மாறிப் போய் விட்டது. அந்தப் பொறுப்பை இப்போது நீர் ஏற்றுக் கொண்டிருக்கிறீர். நாட்டின் அதிபதி என்ற முறையில் நீர் எப்படி நடக்க வேண்டுமோ அப்படி நடக்க முயற்சி செய்யும்.

உமது பிரஜைகள் உம்மைப் பற்றி எப்படிப் பேசிக் கொள்கிறார்கள் தெரியுமா? உம்மைப் பற்றி அவர்கள் கொண்டிருக்கும் கருத்து எத்தகையது என்று எப்போதாகிலும் நீர் ஆராய்ந்திருக்கிறீரா? முந்திய ஆட்சியாளரைப் பற்றி நீர் எதையெல்லாம் சொன்னீரோ அதையெல்லாம் மக்கள் இப்போது உம்மைப் பற்றிச் சொல்கிறார்கள். அவர்களின் ஆட்சியில் நீர் எதிர்பார்த்த அதே முன்னேற்றத்தை மக்கள் இப்போது உம் ஆட்சியில் எதிர்பார்த்திருக்கிறார்கள். அப்படியானால், நாட்டையும் நாட்டு மக்களையும் இன்னும் அதே நிலையில்தானா வைத்திருக்கிறீர்?

மக்களின் கருத்தை உம்மால் அலட்சியம் செய்து விட முடியாது. அவர்கள் உம்மைப் பற்றி என்ன பேசினாலென்ன, எத்தகைய கருத்துக் கொண்டால் என்னஎன்று நீர் அசட்டையாக இருந்து விடக் கூடாது. ஏனெனில் சில வேளைகளில் எல்லாம் வல்ல இறைவனின் கருத்து மக்களின் நாவிலிருந்து வெளிவருகிறது.